ரெயில் பெட்டிக்குள் சிறுநீர் கழித்த பயணியால் பரபரப்பு

ரெயிலில் பயணி சிறுநீர் கழித்ததை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
பெங்களூரு,
வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் ரெயில்கள் சரியாக பராமரிக்கப்படுவ தில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் வடமாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ரெயிலில் பயணி ஒருவா், சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூரு வழியாக சென்னை பெரம்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் படுகை வசதி கொண்ட பெட்டியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பயணித்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ரெயில் விசாகப்பட்டினத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி வந்தபோது, அந்த நபர் திடீரென்று பயணிகள் முன்னிலையில் பேண்டை கழற்றி அங்கிருந்த இருக்கைகள் மீது சிறுநீர் கழித்தார்.
இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலர் அவரை கண்டித்தனர். ஆனால் அவர் யாரையும் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையில் ரெயில் பயணி சிறுநீர் கழித்ததை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். மேலும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.