மும்பையில் 7,500-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


மும்பையில் 7,500-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x
தினத்தந்தி 17 Sep 2024 8:00 PM GMT (Updated: 18 Sep 2024 1:17 AM GMT)

11 நாள் பூஜைக்குப் பின்பு, விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு, மும்பையில் கோலாகலமாக நடந்தது.

மும்பை,

வட இந்தியாவில் பொதுவாக 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறும். அதன் பின்னர் வளர்பிறை சதுர்த்தசி திதியான அனந்த சதுர்த்தசி நாளில் விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இது விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நிகழ்வாக கருதப்படுகிறது. மும்பையில் இந்த ஆண்டு சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.

நேற்று 11-ம் நாள் பூஜைக்குப் பின்பு, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கும் நிகழ்வு, திருவிழா போல கோலாகலமாக நடந்தது. மும்பையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் மக்கள் வெள்ளத்தில் விநாயகர் சிலைகள் மிதந்து வந்தன. பக்தர்கள், மேளதாளங்கள் வாசித்தபடி ஆடிப்பாடி ஆரவாரத்துடன் ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் உற்சாகமாக இதில் பங்கு பெற்றனர். பின்னர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.

நேற்று மாலை 6 மணி வரையில் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 227 சிலைகள் பொதுமக்கள் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டதாகும். 300 சிலைகள் பல்வேறு அமைப்புகளால் அனுமதி பெற்று வைக்கப்பட்டதாகும். இயற்கையான நன்னீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடாது என்பதற்காக செயற்கை நீர்நிலைகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story