கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
திருச்சூரில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மழை கொட்டி வருகிறது.
இதனால் இடுக்கி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில்,இன்று மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தின் சார்பாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே திருச்சூர் மாவட்டத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். குன்னம்குளத்தைச் சேர்ந்த 50 வயதான கணேசன், மற்றும் வலப்பாட்டைச் சேர்ந்த 42 வயதான நிமிஷா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.