இளைஞர்களின் குரலாக எதிர்க்கட்சிகள் உள்ளன - ராகுல் காந்தி


இளைஞர்களின் குரலாக எதிர்க்கட்சிகள் உள்ளன - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 26 Jun 2024 8:26 AM GMT (Updated: 26 Jun 2024 11:17 AM GMT)

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி அவையை திறமையாக நடத்தலாம் என்று எண்ணுவது ஜனநாயகத்துக்கு புறம்பானது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. வேட்பாளரான ஓம் பிர்லா 297 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான சுரேஷ் 232 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓம் பிர்லா 2வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

மேலும் அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,

"தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை சபாநாயகராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்த அவை நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறது. நீங்கள்தான் அந்த குரல்களின் இறுதி நடுவர். அரசுக்கு அரசியல் அதிகாரம் உண்டு. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்திய மக்கள் மற்றும் இளைஞர்களின் குரலாக கடந்த முறையைவிட தற்போது கூடுதல் பலத்துடன் ஒலிக்கும்.

உங்களின் கடமைகளை நீங்கள் செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவ விரும்புகின்றன. இந்த அவை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் முக்கியம். இந்திய மக்களின் குரலான எங்களின் குரலுக்கு வாய்ப்பளிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த அவை எவ்வளவு திறமையாக நடத்தப்படுகிறது என்பது கேள்வி அல்ல, மக்களுக்காக எந்தளவு ஒலிக்க அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி அவையை திறமையாக நடத்தலாம் என்று எண்ணுவது ஜனநாயகத்துக்கு புறம்பானது. எதிர்க்கட்சிகள் நாட்டின் அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டியுள்ளது" என்றார்.


Next Story