ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும்: அமித்ஷா


ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும்: அமித்ஷா
x

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக அமித்ஷா கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் இதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தது.

மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தது.

ராம்நாத் கோவிந்த் குழு அளித்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மசோதாவுக்கு, கடந்த 12-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இன்று மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்றும் அமித்ஷா கூறினார்.


Next Story