ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்?
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு, மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சினைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை.
குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடர் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நண்பகல் 12 மணிக்கு மசோதாவை அறிமுகம் செய்கிறார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் அரசியல் சாசன (129-வது திருத்தம்) மசோதா மற்றும் இந்த தேர்தலுடன் யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கும் இணைந்து தேர்தல் நடத்த வகை செய்யும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய இந்த 2 மசோதாக்களுக்கும் கடந்த வாரம் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.