ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பா.ஜ.க.: மெஜாரிட்டி இலக்கை தாண்டி முன்னிலை


Odissa election result BJP Crossing Halfway Mark
x
தினத்தந்தி 4 Jun 2024 5:55 AM GMT (Updated: 4 Jun 2024 6:36 AM GMT)

ஒடிசாவில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

புவனேஸ்வர்:

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையை கடந்து அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அந்த கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.

இதேபோல் ஒடிசாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. 147 தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் ஆட்சியமைக்க 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் பின்தங்கியது. 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவரது கணிப்பை பா.ஜ.க. தகர்த்து முன்னேறியது.

மதியம் 12 மணி நிலவரப்படி பா.ஜ.க. 78 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை கடந்தது. பிஜு ஜனதா தளம் 54 இடங்களில் முன்னிலையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் 11 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்தது. இரண்டு தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணப்படும்போது, பா.ஜ.க.வின் வெற்றி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது.


Next Story