யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை; ஷாம்பூ போல் தலைக்கு தேய்த்து குளிக்கும் பெண்கள்
நச்சு நுரையை ஷாம்பூ போல் பெண்கள் தலைக்கு தேய்த்து குளிக்கும் அதிர்ச்சிகர காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்கிறது. வெள்ளை நிற பனிப்படலம் போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பா.ஜ.க. கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில், நச்சு நுரையின் அபாயத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். அதிலும் சில பெண்கள் நச்சு நுரையை ஷாம்பூ போல் தலைக்கு தேய்த்து குளிக்கும் அதிர்ச்சிகர காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இத்தகைய செயல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.