ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது - உத்தரபிரதேச அரசு அதிரடி
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,
"சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் இந்த உயிரிழப்புகள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.
எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கொள்கை ஏற்கனவே கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் அவ்வப்போது கடைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. எனவே இந்த கொள்கையை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் , இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்". இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.