எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - மத்திய மந்திரி விளக்கம்
எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதுபற்றி மத்திய சுகாதாரத்துறையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில்,
"எச்.எம்.பி.வி. புதிய வைரஸ் அல்ல. அது ஏற்கனவே உள்ளதுதான். அதன் திரிபோ, அதிக பரவலோ ஏற்படவில்லை. இருப்பினும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். உலக சுகாதார நிறுவனம் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை விரைவில் நம்முடன் பகிர்ந்து கொள்ளும். நிலைமையை ஆய்வு செய்வதற்காக கடந்த 4-ந்தேதி கூட்டு கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது.
நாட்டின் சுகாதார அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு வலையமைப்புகள் எந்தவொரு சுகாதார சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதை உறுதி செய்வதில் விழிப்புடன் உள்ளது. கவலைப்பட எந்த காரணமும் இல்லை, நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.