"இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்.." - நிர்மலா சீதாராமன்


இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்.. - நிர்மலா சீதாராமன்
x

தமிழ்நாட்டில் இந்தி கற்பவர்களை கிண்டல் செய்வார்கள் என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே, நாடாளுமன்ற அலுவல்களும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மக்களவையில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், இந்தியில் பதில் அளித்தார். அப்போது, இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர், நிர்மலா சீதாராமன் பேசிய இந்தி தவறாக உள்ளது என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்க நிர்மலா சீதாராமன் எழுந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், "இந்தி திணிப்பை அவர்கள் (எதிர்க்கட்சிகள்) எதிர்க்கிறார்கள்.. நல்லது.. யாரும் எதையும் திணிக்க முடியாது. உயர் கல்வியை கூட பிராந்திய மொழிகளில் படிக்க வேண்டும் என்றுகூறிய முதல் பிரதமர் மோடிதான்.

மருத்துவ கல்வியை கூட தமிழில் படிக்கும் வாய்ப்புள்ளது. சிறிய விவாதத்திற்காக வாதம் செய்யாதீர்கள். தமிழகத்தில் வாழ்ந்த அனுபவத்தை வைத்து நான் பேசுகிறேன். இந்தி வட இந்திய மொழி.. நீங்கள் இந்தி மொழியையா கற்றுக்கொள்ள போகிறீர்கள் என்று கேட்டனர். எதிர்க்கட்சிகள் இந்தி திணிப்பை எதிர்க்கின்றார்கள். எனக்கு இந்தி தெரியாமல் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு தி.மு.க.வினர் மீதுதான் புகார் கூற வேண்டும்.

இந்தி வட இந்திய மொழி.. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தி கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? என கேலிக்கு உள்ளாக்கினார்கள். அரசியல் ஆதரவு காரணமாக அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் இன்னொரு அங்கம் கிடையாதா? நான் இந்தி கற்றுக் கொள்வதால் என்ன தவறு உள்ளது. அவர்கள் வந்தேறி என்ற வார்த்தையை பயன்படுத்தினர்" என்று அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி திணிப்பை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும், இந்தியை கற்றுக்கொள்வதை யாரும் எதிர்த்ததில்லை என்றும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், சென்னையில் இந்தி பிரசார சபாவை எரித்தது யார்? என்றும் கேள்வி எழுப்பவே, பா.ஜ.க. எம்.பி.க்கள் மேஜைகளை தட்டி நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


Next Story