நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் - மலப்புரத்தில் மாஸ்க் கட்டாயம்
மலப்புரம் மாவட்டத்தில், நிபா வைரஸ் பாதித்த 2-வது நபர் பலியான நிலையில், பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்,
மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்த இரண்டாம் நபர் பலியான நிலையில், நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராம பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் சார்பில் நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே செப்டம்பர் 9ஆம் தேதி பெங்களூருவிலிருந்து கேரளா திரும்பிய நபர் நிபா வைரஸ் பாதித்து பலியான நிலையில், நேற்று 24 வயது இளைஞர் தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இதர பணிகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, தொழில் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, அத்தியாவசியமாக இருந்தால், குறைந்த எண்ணிக்கையில் கூடுவதற்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் சுயமாக மருத்துவம் செய்துகொள்ளாமல், உடனடியாக மருத்துவமனையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலங்கு அல்லது பறவை கடித்த பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகளை சமைக்கும் முன்பு நன்கு சுத்தப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.