சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் சரண்
சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 9 பேர் இன்று சரணடைந்துள்ளனர்.
ராய்ப்பூர்,
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கார் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் அதிகளவில் நடமாடி வருவதால் அவர்களை ஒடுக்கும் பணியில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நக்சலைட்டுகள் பலர் தங்களுடைய ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 9 பேர் அம்மாவட்ட எஸ்.பி. கிரண் முன்னிலையில் இன்று போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 9 நக்சலைட்டுகளில் இரண்டு பெண்கள் அடங்குவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்கள் அனைவருக்கும் மொத்தமாக ரூ.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஒருவருக்கு ரூ.8 லட்சமும், 4 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், பெண் நக்சலைட்டுகள் இரண்டு பேருக்கு தலா ரூ.3 லட்சமும், மேலும் இருவருக்கு தலா ரூ.2 லட்சமும் சன்மானம் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, சுக்மா உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் 792 நக்சலைட்டுகள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.