இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை - சஞ்சய் ராவத்


இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை - சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 7 Jun 2024 9:13 AM IST (Updated: 7 Jun 2024 11:47 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய அரசியலின் எதிரி தேவேந்திர பட்னாவிஸ் என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில், மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி பின்னடைவை சந்தித்து உள்ளது. குறிப்பாக பா.ஜனதா கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டு 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பா.ஜனதா தலைமையிடம் தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மராட்டியத்தில் பா.ஜனதாவின் தோல்விக்கு தேவேந்திர பட்னாவிஸ் தான் பொறுப்பு. மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்ட தரம் தாழ்ந்த அரசியல், வஞ்சக கலாசாரத்துக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர். மராட்டிய அரசியலின் எதிரி தேவேந்திர பட்னாவிஸ். அவரின் ராஜினாமா அறிவிப்பு ஒரு நாடகம்.

பிரதமர் மோடி கூட இதுபோன்ற நாடகங்களை நடித்து உள்ளார். சில நேரம் அவர் சிரிப்பார். திடீரென சோகமாக இருப்பார். பட்னாவிஸ் அவரின் மாணவன். எனவே அதே நாடகத்தை அரங்கேற்றுகிறார். ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி-அமித்ஷா அரசை ஆதரிக்காது என நம்புகிறேன். 2 பேரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒதுக்கி வருகின்றனர்.

மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக 'இந்தியா' கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் பா.ஜனதாவை வீழ்த்த இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story