சீனா அறிவித்த புதிய மாவட்டங்கள்.. இந்தியா கடும் எதிர்ப்பு


சீனா அறிவித்த புதிய மாவட்டங்கள்.. இந்தியா கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Jan 2025 6:42 PM IST (Updated: 3 Jan 2025 6:47 PM IST)
t-max-icont-min-icon

புதிய மாவட்டங்கள் தொடர்பான சீனாவின் அறிவிப்புக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் வடமேற்கில் அக்சாய் சின்(Aksai Chin) நிலப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் நீண்ட காலமாக சர்ச்சை நீடித்து வருகிறது. இந்திய அரசால் உரிமை கோரப்படும் அக்சாய் சின் பகுதி, தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த பகுதி 1947 பிரிவினையின்போது இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இதனை சீன அரசு தங்களுக்கு சொந்தமான பகுதியாகவே கருதியது. இந்த எல்லை விவகாரத்தால் 1962-ம் ஆண்டு இந்தோ-சீனா போர் மூண்டது.

இந்த போரில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. பின்னர் அக்சாய் சின் வழியாக சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் சாலையை சீன அரசு அமைத்தது.

இந்த ஆக்கிரமிப்பு பகுதியின் அருகில் சீனாவின் ஹோடன் மாகாணம் அமைந்துள்ள நிலையில், இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவின் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் வருகின்றன. அந்த பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இருப்பினும் சீனாவின் ஆக்கிரமிப்பை இந்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.

சீனாவின் அறிவிப்புக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய பகுதியை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், "சீனா அறிவித்துள்ள 2 புதிய மாவட்டங்கள் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் வருகின்றன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட பகுதியின் மீதான இந்தியாவின் இறையாண்மை தொடர்பான நீண்டகால நிலைப்பாட்டை மாற்ற முடியாது.

இந்த செயல் சீனாவின் சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாய ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது. நாங்கள் தூதரக வழிகள் மூலம் சீன தரப்பிற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளோம்" என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.


Next Story