அரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கிறார்
நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
சண்டிகார்,
அரியானாவில் கடந்த 5-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி ஆளும் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. அங்கு புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மேற்கொண்டது. இதற்காக முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரை (முதல்-மந்திரி) தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது.
பஞ்ச்குலாவில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்தியபிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நயாப் சிங் சைனி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை புதிய எம்.எல்.ஏ. கிரிஷன் குமார் பெடி மற்றும் அனில விஜ் ஆகியோர் முன்மொழிந்தனர்.
முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட நயாப் சிங் சைனிக்கு மேலிட பார்வையாளர்கள், சக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர், அங்கு கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரும் மாநிலத்தில் புதிய அரசை அமைக்க சைனிக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து அரியானா மாநில முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார். அவருடன் புதிய மந்திரிகளும் பதவியேற்கிறார்கள்.
பஞ்ச்குலாவில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.