உளவாளி என்ற சந்தேகத்தில் அங்கன்வாடி உதவியாளரை கொன்ற நக்சலைட்டுகள்


உளவாளி என்ற சந்தேகத்தில் அங்கன்வாடி உதவியாளரை கொன்ற நக்சலைட்டுகள்
x

அங்கன்வாடி உதவியாளரை கொன்ற நக்சலைட்டுகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பசகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திமாபூர் கிராமத்தில் வசித்து வந்தவர் லட்சுமி பதம்(45). இவர் அங்குள்ள அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று இரவு லட்சுமியின் வீட்டிற்குள் புகுந்த சில அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள் அவரை போலீசாரின் உளவாளி எனக்கூறி, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கழுத்தை நெரித்து கொன்றனர். மேலும் லட்சுமியின் உடலை வீட்டின் முற்றத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இடத்தில் கிடந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் அந்த பெண் போலீஸ் உளவாளியாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிக்க அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்துடன், பிஜாப்பூர் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பிரிவின் தனித்தனி இடங்களில் இந்த ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story