தேசம் முதலில் என்பதே பா.ஜ.க.வின் முன்னுரிமை; ஆனால் காங்கிரசுக்கு... பிரதமர் மோடி காரசார பேச்சு


தேசம் முதலில் என்பதே பா.ஜ.க.வின் முன்னுரிமை; ஆனால் காங்கிரசுக்கு... பிரதமர் மோடி காரசார பேச்சு
x
தினத்தந்தி 6 Feb 2025 5:09 PM IST (Updated: 6 Feb 2025 6:06 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் மாடல் என்பது பொய்கள், மோசடி, திருப்திப்படுத்துவது மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றின் கலவை ஆகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பு ஆண்டின் முதல் தொடர் என்ற வகையில், ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம். இதன்படி, கடந்த ஜனவரி 31-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். இதன்பின்னர், கடந்த 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் உள்ளிட்ட சாதக அம்சங்களுடன் கூடிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து, பிரதமர் மோடி கடந்த செவ்வாய் கிழமை மக்களவையில் பேசினார். அப்போது, ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை சாடினார். இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் மக்களவைக்கான எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கிண்டலடிக்கும் வகையிலும் பேசினார்.

இந்நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து, மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று பேசினார். அவர் பேசும்போது, முதலில் குடும்பம் என்பதே காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை ஆகும். அதன் கொள்கைகளும் அதனை சுற்றியே இருக்கும் என்றார்.

அனைவரின் ஆதரவுடன், அனைவருக்கும் வளர்ச்சி என்ற பொறுப்புணர்வானது எல்லோருக்கும் உள்ளது. ஆனால், காங்கிரசிடம் இருந்து இதனை எதிர்பார்ப்பது என்பது ஒரு பெரிய தவறு என்றார். காங்கிரசின் மாடல் என்பது பொய்கள், மோசடி, திருப்திப்படுத்துவது மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றின் கலவை ஆகும்.

2014-ம் ஆண்டுக்கு பின்னர், இந்தியாவில் மாற்று மாடல் கொண்ட அரசாங்கம் அமைந்தது. இந்த அரசு நிர்வாகத்தின் மாடல் திருப்திப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தவில்லை. அதற்கு பதிலாக மனநிறைவு என்பதில் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

தேசம் முதலில் என்பதே பா.ஜ.க.வின் முன்னுரிமை. எங்களுடைய வளர்ச்சிக்கான மாடலை மக்கள் ஆதரித்துள்ளனர். பொதுமக்களின் நலன்களுக்காக, வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது உறுதி செய்யப்படுவதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

இதேபோன்று தலித்துகள், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எஸ்.சி., எஸ்.டி. சட்டங்களை நாங்கள் வலுப்படுத்தியிருக்கிறோம் என்றும் பேசியுள்ளார்.


Next Story