"போராட்டங்களை மம்தா அரசு தடுக்க முயல்கிறது.." - கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு


போராட்டங்களை மம்தா அரசு தடுக்க முயல்கிறது.. - கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Aug 2024 12:53 PM GMT (Updated: 18 Aug 2024 3:13 PM GMT)

மகளை டாக்டராக்க கடினமாக உழைத்தோம். எங்களுக்கு நிவாரணம் வேண்டாம். நீதியே தேவை என்று பெண் டாக்டரின் தாயார் தெரிவித்தார்.

கொல்கத்தா,

கடந்த 9ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதனிடையே பயிற்சி பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நேற்று நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது. இதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் வரும் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டங்களை மம்தா பானர்ஜி அரசு தடுக்க முயல்வதாக கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மகளை டாக்டராக்க மிகவும் கடினமாக உழைத்தோம். எங்களுக்கு நிவாரணம் வேண்டாம். நீதியே தேவை. நீதி கேட்டு நடக்கும் போராட்டங்களை மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா தடுக்க முயற்சிக்கிறார். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று அவர் (மம்தா பானர்ஜி) கூறினார். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு முழுத் துறையும் பொறுப்பேற்க வேண்டும். போலீசார் சரியாகச் செயல்படவில்லை. இன்று மக்கள் போராட்டம் நடத்த முடியாதபடி 144 தடை விதித்துள்ளார் முதல்-மந்திரி.

போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை சிறையில் அடைக்க அரசு முயற்சிக்கிறது. போலீசார் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை, அவர்கள் வழக்கை மூடிமறைக்க மட்டுமே முயன்றனர். விரைவாக பிரேத பரிசோதனை செய்து உடலை அகற்றுவதே அவர்களின் முயற்சியாக இருந்தது " என்று பெண் டாக்டரின் தாயார் தெரிவித்துள்ளார்.


Next Story