மிசோரமில் பரிதாபம்:கனமழையால் கல்குவாரி பாறைகள் சரிந்து 17 பேர் பலி


மிசோரமில் கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி
x
தினத்தந்தி 28 May 2024 7:15 AM GMT (Updated: 29 May 2024 3:20 AM GMT)

மிசோரமில் கனமழை காரணமாக கல்குவாரி பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அய்சால்,

வங்கக்கடலில் உருவான 'ராமெல்' புயல் நேற்று முன்தினம் மேற்கு வங்காளம் - வங்காளதேசம் இடையே கரையை கடந்தது. மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள், குடியிருப்புகள் சேதம் அடைந்தன.

புயல் காரணமாக நேற்று காலையும் மிசோரமில் மழை நீடித்தது. அய்சால் புறநகர் பகுதியான மெல்தும் - லிமன் பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த குவாரியில் கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாறைகள் திடீரென சரிந்து விழுந்தன.

இந்த விபத்தில் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கி 2 சிறுவர்கள் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கனமழை காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் 7 தொழிலாளர்கள் மாயமாகி உள்ளனர்.

அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சம்பவம் குறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. அனில் சுக்லா கூறுகையில், 'பாறை சரிந்த இடத்தில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மழையால் மீட்புப்பணியில் சற்றுதொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பணியை முடுக்கிவிட்டுள்ளோம்' என்று தெரிவித்தார்.

இதுதவிர மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மாநில தலைநகர் முற்றிலுமாக போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாநில முதல்-மந்திரி லால்து ஹோமா, கல்குவாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, தலா ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 8 பேரின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மேலும் நிலச்சரிவால் பல இடங்களில் வீடுகளும், சுரங்கங்களும் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இவற்றில் சிக்கி 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் மிசோரமில் மழை, நிலச்சரிவு சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மிசோரமில் புயலால் ஏற்பட்ட கனமழையினால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் 150 சுரங்கங்கள் சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story