பயிற்சி பெண் டாக்டரின் பெற்றோரை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி


பயிற்சி பெண்  டாக்டரின் பெற்றோரை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 12 Aug 2024 8:49 AM GMT (Updated: 12 Aug 2024 10:55 AM GMT)

பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9ம் தேதி அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்களும் இருந்தன.

2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்த அவர் அங்கு பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 8-ந்தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக பெண் டாக்டரின் தந்தை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் பெண் டாக்டரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக முதற்கட்ட முடிவுகள் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த 10ம் தேதி சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்திய டாக்டர்கள் சங்கம் இன்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டரின் பெற்றோரை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை கோரப்படும் என்று அவர்களிடம் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.


Next Story