நிதி ஆயோக் கூட்டத்தில் பாரபட்சம்: நாயுடுவுக்கு மட்டும் 20 நிமிடமா..? - மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு
நிதி ஆயோக் கூட்டத்தில் தன்னிடம் பாரபட்சம் காட்டியதாகவும், வெறும் 5 நிமிடங்களே பேச வாய்ப்பளித்ததாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி முதல் மந்திரிகள் பங்கேற்கவில்லை. மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து மம்தா பானர்ஜி விளக்கி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியது. இதனால் வெளிநடப்பு செய்துள்ளேன். பா.ஜனதா மற்றும் பா.ஜனதா கூட்டணி முதல்-மந்திரிகள் 10 முதல் 20 நிமிடம் வரை பேசினார்கள். சந்திரபாபு நாயுடு (ஆந்திர முதல்-மந்திரி) 20 நிமிடங்கள் வரை பேசினார். அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரிகள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினார்கள். அவர்களுக்கு வாய்ப்பளித்த மத்திய அரசு எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்-மந்திரிகளில் நான் மட்டுமே பங்கேற்றேன். ஆனாலும் நிதி ஆயோக் கூட்டத்தில் என்னிடம் பாரபட்சம் காட்டினார்கள்.
வெறும் 5 நிமிடம் மட்டும் எனக்கு பேச வாய்ப்பளித்தனர். 5 நிமிடத்துக்கு மேல் பேசியபோது மைக்கை ஆப் செய்தனர். இதனால் எதற்கு என்னை தடுக்கிறீர்கள்? ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? நான் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதற்கு பதிலாக உங்கள் கட்சியின் முதல்-மந்திரிகள், கூட்டணியில் உள்ள முதல்-மந்திரிகளுக்கு அதிக வாய்ப்பை வழங்கி என்னை புறக்கணிக்க கூடாது. இது மேற்கு வங்க மாநிலம் மட்டுமின்றி அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும். இது நியாயமற்றது என்று கூறினேன்.
எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்-மந்திரியாக நான் மட்டுமே பங்கேற்றேன். இதற்கு காரணம் கூட்டாச்சி முறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது தான். ஆனால் பட்ஜெட்டில் அரசியல் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிற மாநிலங்கள் மீது ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். மேலும் நிதி ஆயோக்கிற்கு நிதி சார்ந்த அதிகாரம் இல்லை. பிறகு எப்படி இது இயங்கும்? நிதி ஆயோக்கிற்கு நிதி அதிகாரத்தை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பழைய திட்ட கமிஷனையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறினேன்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.