சொகுசு வசதிக்காக அடாவடி... அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி


சொகுசு வசதிக்காக அடாவடி... அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
x
தினத்தந்தி 11 July 2024 1:36 AM GMT (Updated: 11 July 2024 4:06 AM GMT)

சொகுசு வசதிக்காக அடாவடித்தனம் செய்த பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் பூஜா கேட்கர். பயிற்சியின் போது இவர் தனக்கு தனி அலுவலக அறை, காருக்கு வி.ஐ.பி. எண், தனி தங்குமிடம், உதவியாளர் வேண்டும் என கேட்டு அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கொடுக்கப்படுவதில்லை. இருந்தாலும் அவர் இந்த வசதிகளை கேட்டு உயர் அதிகாரிகளை நச்சரித்து வந்துள்ளார்.

இதற்கிடையே புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறையை ஆக்கிரமித்து கொண்ட பூஜா கேட்கர், அறைக்கு வெளியே இருந்த கூடுதல் கலெக்டரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு தனது பெயர் பலகையை மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஒப்பந்ததாரர் ஒருவர் கொடுத்த விலையுயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.

பூஜா கேட்கரின் அடாவடித்தனம் எல்லை மீறி போகவே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாசிம் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடிக்க அவருக்கு மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

பூஜா கேட்கர் தொடர்பாக புனே மாவட்ட கலெக்டர் சுகாஸ் திவசே மாநில அரசிடம் அளித்து உள்ள அறிக்கையில், "பூஜா கேட்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடந்து கொள்ளவில்லை. அதிகமாக மரியாதை எதிர்பார்க்கிறார். அவரது தந்தை, மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என உள்ளூா் அதிகாரிகளை மிரட்டுகிறார்" என குறிப்பிட்டு உள்ளார்.

பூஜா கேட்கரின் தந்தை ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஆவார். அவர் ஓய்வுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட்ட போது தனக்கு ரூ.40 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார். இந்தநிலையில் பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஒ.பி.சி.) சேர்ந்தவர் என கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

யு.பி.எஸ்.சி. தேர்வு முறையிலும் முறைகேடுகள் நடப்பதாக பூஜா கேட்கர் விவகாரத்தை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story