'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியின் வாகனத்தில் சக்கரமும் இல்லை, பிரேக்கும் இல்லை - பிரதமர் மோடி கிண்டல்


மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் வாகனத்தில் சக்கரமும் இல்லை, பிரேக்கும் இல்லை - பிரதமர் மோடி கிண்டல்
x

மராட்டிய மாநிலத்தில் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியின் வாகனத்தில் சக்கரமும் இல்லை, பிரேக்கும் இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பஸ்சில் இலவச பயணம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியின் வாகனத்தில் சக்கரமும் இல்லை, பிரேக்கும் இல்லை என பிரதமர் மோடி கிண்டலாக தெரிவித்துள்ளார். இது குறித்து சோலாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவ்து;-

"நிலையான அரசாங்கத்தால் மட்டுமே நீடித்த வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுக்க முடியும். மராட்டிய மாநிலத்திற்கு 'மகாயுதி' கூட்டணியின் நிலையான ஆட்சி தேவை. அதே சமயம், 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியின் வாகனத்தில் சக்கரமும் இல்லை, பிரேக்கும் இல்லை. அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு அவர்களுக்குள்ளேயே சண்டை நிலவுகிறது.

பல தசாப்தங்களாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, பல்வேறு பிரச்சினைகளை விட்டுச் சென்றுள்ளது. மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் விவசாயிகள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டனர். வேளாண்மை சார்ந்த பிரச்சினைகளை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பா.ஜ.க. அரசு இந்த பிரச்சினைகளுக்கு கவனமாக தீர்வு கண்டு வருகிறது."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story