காங்கிரசின் பொய்கள், வஞ்சகத்தை மராட்டிய தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளது - பிரதமர் மோடி
காங்கிரசின் பொய்கள், வஞ்சகத்தை மராட்டிய தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின. தேர்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 49 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், காங்கிரசின் பொய்கள், வஞ்சகத்தை மராட்டிய தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், நிர்வாக திறனால் மராட்டியத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரசின் பொய்கள், வஞ்சகத்தை மராட்டிய தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளது. காந்தி குடும்பம் பிரிவினைவாத விஷத்தை பரப்புகிறது. அரசியல் சாசன மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது' என்றார்.