மத்திய பிரதேசம்: தலித் திருமணத்தில் குதிரை வண்டி - மாற்று சமூகத்தினர் தாக்குதல்
தலித் திருமணத்தில் குதிரை வண்டியை பயன்படுத்த மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்த தலித் இளைஞர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது மணமகனமை குதிரை வண்டியில் ஏற்றி அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் மணமகனின் குடும்பத்தினர் ஒரு குதிரை வண்டியை வாடகைக்கு வாங்கி, மணமகனை அதன் மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து குதிரை வண்டியின் உரிமையாளர் மற்றும் குதிரை பராமரிப்பாளர்கள் 3 பேர் ஆகியோர் திருமண மண்டபத்தில் இருந்து குதிரை வண்டியை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தனர்.
அப்போது அவர்களை அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த ரத்னேஷ் தாக்கூர் உள்பட 3 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்களுடன் மேலும் சிலர் இணைந்து குதிரை வண்டியின் உரிமையாளர் மற்றும் அவருடன் இருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் குதிரையையும் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அடித்துள்ளனர். இதில் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து குதிரை வண்டியின் உரிமையாளரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித் திருமணங்களில் குதிரையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் குஜராத்தில் நடந்த ஒரு தலித் திருமண ஊர்வலத்தின்போது குதிரையில் சென்று கொண்டிருந்த மணமகனை சிலர் வழிமறித்து தாக்கிய சம்பவம் அரங்கேறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டதில் கான்ஸ்டபிள் ஒருவரின் திருமணத்தின்போது குதிரையை பயன்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சக போலீசாரின் பாதுகாப்புடன் அந்த கான்ஸ்டபிள் குதிரை மீது ஏறி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.