விபசாரத்தில் தள்ள வங்காளதேச சிறுமிகளை இந்தியாவுக்கு கடத்திய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு


விபசாரத்தில் தள்ள வங்காளதேச சிறுமிகளை இந்தியாவுக்கு கடத்திய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
x

வங்காளதேச சிறுமிகள் கடத்தல் விவகாரத்தில் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி, பெண் உள்பட 6 பேரை கைது செய்தது.

ஐதராபாத்,

வங்காளதேசத்தில் உள்ள சிறுமிகள் சிலரிடம் நல்ல சம்பளத்தில் வேலை இருக்கிறது என கூறி அவர்களை சிலர் இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதன்பின்னர் அந்த சிறுமிகள் விபசாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உப்புகுடா பகுதியில் கண்டிகல் கேட் என்ற இடத்தில் 2019-ம் ஆண்டில், வீடு ஒன்றில் போலீசார் சோதனை நடத்தியதில் 5 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் வங்காளதேச நாட்டு சிறுமிகள் என தெரிய வந்தது.

இதுபற்றி 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் சத்ரினகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின்னர், அதே ஆண்டு செப்டம்பர் 17-ல் மறுவழக்கை பதிவு செய்த என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை), விசாரணை நடத்தி பெண் உள்பட 6 பேரை கைது செய்தது.

2020-ம் ஆண்டு மார்ச் 10-ந்தேதி 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தது. இதன்பின்பு, மீதமுள்ள 2 பேருக்கு எதிராக அதே ஆண்டு ஆகஸ்டில் துணைநிலை குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தது.

இதுபற்றிய வழக்கு விசாரணை ஐதராபாத் நகரிலுள்ள என்.ஐ.ஏ.வின் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இதில், கைது செய்யப்பட்ட 6 பேரையும் குற்றவாளிகள் என உத்தரவிட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தலா ரூ.24 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவற்றை கட்ட தவறினால், குற்றவாளிகள் கூடுதலாக 18 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.


Next Story