கும்பமேளா நெரிசல் உயிரிழப்புகள்: பிரயாக்ராஜில் நீதி விசாரணைக் குழு ஆய்வு

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு 3 பேர் கொண்ட நீதி விசாரணைக்குழு அமைத்தது.
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60க்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மகா கும்பமேளாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்தக் குழு இன்று பிரயாக்ராஜ் சென்று ஆய்வைத் தொடங்கியது.
அலகாபாத் ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவில், முன்னாள் காவல் துறை இயக்குநர் (டிஜிபி) வி.கே.குப்தா மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி டி.கே.சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "விசாரணை ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தி வருகிறது. அவர்கள் அன்று சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிடுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.