கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு இன்று தண்டனை அறிவிப்பு

கோப்புப்படம்
குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு சியால்டா மாவட்ட அமர்வு கோர்ட்டு இன்று தண்டனையை அறிவிக்கிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின.
மறுபுறம் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின. அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் கடந்த நவம்பர் 12-ந் தேதி முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்தது. அத்துடன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி இந்த வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று (திங்கட்கிழமை) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் நடந்த இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் சஞ்சய்-க்கு மரண தண்டனை விதிக்க சி.பி.ஐ. வலியுறுத்தி உள்ளது. மரண தண்டனை விதித்தாலும் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என சஞ்சயின் தாயார் உறுதிபட தெரிவித்துள்ளார்.