கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு
மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மேற்கு வங்கத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டு மாணவ அமைப்பினர் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
Live Updates
- 27 Aug 2024 2:13 PM IST
பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை
‘காவல்துறை நடத்திய தடியடியில் பலர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் இவ்வாறு அட்டூழியத்தை தொடர்ந்து செய்தால். நாளை மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைப்போம்’ என பா.ஜ.க. தலைவர் சுவெந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 27 Aug 2024 2:09 PM IST
தலைமைச் செயலக கட்டிடத்திற்கு செல்லும் பாதைகளில், குறிப்பாக, ஹவுராவில் உள்ள சந்த்ராகாச்சி ஸ்டேஷன், மத்திய கொல்கத்தாவில் உள்ள ஹேஸ்டிங்ஸ் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 27 Aug 2024 2:07 PM IST
புதிய மாணவர் அமைப்பு
புதிதாக உருவாக்கப்பட்ட பாசிம் பங்கா சத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கொல்கத்தா கல்லூரி சதுக்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக, கொல்கத்தா போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடிக்கின்றனர். மாணவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.
- 27 Aug 2024 1:50 PM IST
மாணவர் ஆர்வலர்கள் 4 பேர் அதிரடி கைது
தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி தொடங்குவதற்கு முன்னதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியமான 4 மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்துள்ளது.
மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த சுவோஜித் கோஷ், புலேகேஷ் பண்டிட், கவுதம் சேனாபதி மற்றும் பிரீத்தம் சர்க்கார் ஆகியோர் நேற்று நள்ளிரவில் திடீரென காணாமல் போனதாக எதிர்க்கட்சி தலைவர் சுவெந்து அதிகாரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“மாணவர் ஆர்வலர்கள் 4 பேரும் ஹவுரா ரெயில் நிலையத்தில் தன்னார்வலர்களுக்கு உணவு விநியோகம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் மம்தாவின் காவல்துறைதான் பொறுப்பு. இந்த கைது நடவடிக்கை தொடர்பாக அவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்‘ என்றும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள காவல்துறை, “யாரும் காணாமல் போகவில்லை. 4 பேரும் இன்று தலைமைச் செயலகம் நோக்கி நடைபெறும் பேரணியின்போது பெரிய அளவிலான வன்முறையில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். மேலும் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொது பாதுகாப்பு கருதி அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என கூறி உள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளது.
- 27 Aug 2024 1:33 PM IST
ஹவுராவின் சந்திரகாச்சி பகுதியில், காவல்துறையினரின் தடுப்பு மீது ஏறி மாணவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். தடையை மீறி பேரணியாக செல்வதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.