கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு; மருத்துவமனை முன்னாள் முதல்வருக்கு ஜாமீன்
ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை கொல்கத்தா போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
இதன்படி விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். நிதி முறைகேடுகள் தொடர்பாக சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாகவும் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சீல்டா கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திகையை தாக்கல் செய்யாததால், இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.