உ.பி.யில் எழுத்துப்பிழையால் அம்பலமான கடத்தல் நாடகம்


உ.பி.யில் எழுத்துப்பிழையால் அம்பலமான கடத்தல் நாடகம்
x

உத்தரபிரதேசத்தில் தன்னை தானே கடத்தி எழுத்துப்பிழையால் போலீசில் ஒருவர் சிக்கிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் ஆள்கடத்தல் நாடகத்தை நிகழ்த்திய நபர், எழுத்துப் பிழையால் சிக்கிய சம்பவம் நடந்தேறியுள்ளது. பந்த்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவரின் தம்பி சந்தீப் (27) கடத்தப்பட்டதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50,000 பணம் அளிக்க வேண்டும் என்றும் சஞ்சயின் செல்போனுக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மொபைல் போனுக்கு வந்த மிரட்டல் செய்தியில், பணத்தைக் கொடுக்காவிட்டால் தம்பி கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் Death என்ற வார்த்தைக்கு பதிலாக Deth என தவறாக எழுதியிருந்ததை போலீசார் கவனித்துள்ளனர். ஆகவே படிப்பறிவு இல்லாத நபர் தான் அவரை கடத்தியுள்ளார் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.

சந்தீப் குமாருக்கும் யாரிடமும் பெரிதாக விரோதம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், அவரின் தம்பியை விடுவிக்க கேட்கப்பட்ட தொகையும் பெரிய தொகையாக இல்லை என்பது காவல் துறையின் சந்தேகத்தை அதிகரித்தது.

இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில், சந்தீப்பின் செல்போன் இருப்பிடத்தை போலீசார் ஆராய்ந்துள்ளனர். அதில் அவர் ரூபாபூரில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று சந்தீப்பை மீட்ட போலீசார், அவரின் அண்ணனுக்கு அனுப்பப்பட்டது போன்ற கடத்தல் குறிப்பை எழுதிக் காட்டுமாறு சந்தீப்பிடம் கூறியுள்ளனர். அந்தக் குறிப்பில் அவர் Death என்ற வார்த்தைக்கு பதிலாக Deth என தவறாக எழுதினார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், தனது அண்ணனிடம் பணம் பறிக்கும் நோக்கில், தான் கடத்தப்பட்டது போன்ற நாடகத்தை நிகழ்த்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story