கேரளா: மனைவியை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற கணவர்
கேரளாவை சேர்ந்த நபர் தனது மனைவியை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் பத்மராஜன். இவரது மனைவியான அனிலா(44), நேற்று மாலை ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற காரை பத்மராஜன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் செம்மாமுக்கு என்ற பகுதியில் அருகே அனிலா சென்ற காரை பத்மராஜன் இடைமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த பெட்ரோலை அந்த கார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் காருக்குள் இருந்த அனிலா மற்றும் அவரது ஆண் நண்பருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அனிலா உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு நபர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். காருக்கு தீ வைத்த பத்மராஜனை கொல்லம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.