நிபா வைரஸ்: கேரளாவில் சிறுவன் உயிரிழப்பு
கேரளாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிபா வைரஸ் மீண்டும் தலைதூக்கி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு அவனது நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான். இதற்கிடையில் அவனது கிராமத்தில் மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அந்தக் கிராமத்தை சேர்ந்த 214 பேர் கண்காணிப்பில் உள்ளனர். பாண்டிக்காடு, அனக்காயம் ஊராட்சிகளில் சுகாதாரக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், யாரும் அச்சப்பட தேவையில்லை. தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களை போலீசார் உதவியுடன் தேடி வருகிறோம் என்றார்.