'கங்கனா ரனாவத் மீண்டும் என்னுடன் நடிக்க சம்மதிக்க மாட்டார்' - கலகலப்பாக பேசிய சிராக் பாஸ்வான்


கங்கனா ரனாவத் மீண்டும் என்னுடன் நடிக்க சம்மதிக்க மாட்டார் - கலகலப்பாக பேசிய சிராக் பாஸ்வான்
x

Image Courtesy : PTI

தினத்தந்தி 20 July 2024 6:49 PM IST (Updated: 20 July 2024 8:59 PM IST)
t-max-icont-min-icon

கங்கனா ரனாவத் மீண்டும் தன்னுடன் நடிக்க சம்மதிக்க மாட்டார் என சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரியும், லோக் ஜன்சக்தி(ராம் விலாஸ்) கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான 'மிலே நா மிலே ஹம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு சிராக் பாஸ்வான் வேறு படங்களில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சிராக் பாஸ்வான், பீகார் மாநிலத்தின் ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே சமயம், நடிகை கங்கனா ரணாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திரைப்படத்தில் ஜோடியாக நடித்த இருவரும் தற்போது எம்.பி.யாக பதவியேற்றுள்ள நிலையில், இருவரும் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிப்பார்களா? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இது தொடர்பாக சிராக் பாஸ்வான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலகலப்பாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"நான் பாலிவுட் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க மாட்டேன். எனது நடிப்பு மிகவும் மோசமாக இருக்கும். நான் நடித்த ஒரே ஒரு படமும் தோல்வி அடைந்தது. அந்த படத்தை பார்த்தவர்கள் எனது கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

என்னை வைத்து எந்த இயக்குநரோ, தயாரிப்பாளரோ இனி படம் எடுக்க மாட்டார்கள். கங்கனா ரணாவத் கூட மீண்டும் என்னுடன் நடிக்க சம்மதிக்க மாட்டார். பாலிவுட்டில் எனது சிறிய பயணம் வாழ்க்கையில் நான் எதை செய்யக்கூடாது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது.

எனது திருமணம் குறித்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு என்னால் சிந்திக்க முடியாது. பிகாரில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அது தொடர்பான பணிகளே எனக்கு முதன்மையாக இருக்கும். திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். எனது வாழ்க்கை துணைக்கான நேரத்தை என்னால் ஒதுக்க முடியாவிட்டால், திருமண பந்தத்திற்குள் நுழையக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்."

இவ்வாறு சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.


Next Story