10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை


10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2024 7:35 AM IST (Updated: 4 Jun 2024 8:09 AM IST)
t-max-icont-min-icon

தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விகாஸ் ரஸ்தோகி. இவர் மாநில அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை முதன்மை செயலாளராக உள்ளார். இவரது மனைவி ராதிகா ரஸ்தோகியும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார். இந்த ஐ.ஏ.எஸ். தம்பதியினர் மும்பை நரிமன்பாயின்ட் பகுதியில் மாநில அரசின் தலைமை செயலகமான மந்திராலயா அருகில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இவர்களின் மகள் லிபி ரஸ்தோகி (வயது26). இவர் அரியானா மாநிலம் சோனிபத்தில் உள்ள கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் தாய், தந்தை தூங்கி கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் லிபி ரஸ்தோகி கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். கீழே விழுந்து படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகில் உள்ள ஜி.டி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு லிபி ரஸ்தோகியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் அவர், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட லிபி ரஸ்தோகி கல்லூரி படிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மிகவும் விரக்தியுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. படிப்பில் எதிர்பார்த்த அளவில் வெற்றி கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐ.ஏ.எஸ். தம்பதியின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story