ஜார்க்கண்ட்: பாஜகவில் இணைந்தார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.


ஜார்க்கண்ட்: பாஜகவில் இணைந்தார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.
x

ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 43 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன.

இதனிடையே, அம்மாநிலத்தின் பகூர் மாவட்டம் லிதிபரா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த தினேஷ் வில்லியம்ஸ் மரண்டி செயல்பட்டு வந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பவில்லை.

இந்நிலையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தினேஷ் வில்லியம்ஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார். லிதிபரா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான சிவ்ராஜ் சிங் முன்னிலையில் தினேஷ் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்துள்ள தினேஷுக்கு நடப்பு தேர்தலில் லிதிபரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story