ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு


ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
x

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கு நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி கடந்த 13-ந்தேதி 43 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு 20-ந்தேதி(நாளை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட உள்ளன. இந்த தேர்தலில், 'இந்தியா' கூட்டணிக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளராக பெர்ஹைட் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பாபுலால் மரண்டி, தன்வார் தொகுதியில் களமிறங்குகிறார். இதுதவிர ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் கல்பனா சோரன், காண்டே தொகுதியிலும், சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்டோ, பாலா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

நாளை நடைபெற உள்ள தேர்தலில் மொத்தம் 528 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 472 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் முன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதே போல், மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் நாளை வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளனர். இதில் 62.8 லட்சம் ஆண்களும், 61 லட்சம் பெண்களும், 145 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நடைபெறும் 38 தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படைகள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story