எம்.பி. தேர்தலுக்காக ராஜினாமா செய்த தொகுதியில் மீண்டும் போட்டி: ஆர்ஜேடி வேட்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த வாக்காளர்கள்


எம்.பி. தேர்தலுக்காக ராஜினாமா செய்த தொகுதியில் மீண்டும் போட்டி: ஆர்ஜேடி வேட்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த வாக்காளர்கள்
x
தினத்தந்தி 13 July 2024 9:24 AM GMT (Updated: 13 July 2024 10:45 AM GMT)

எம்.எல்.ஏ வாக இருந்த தொகுதியை ராஜினாமா செய்தவருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை வாக்காளர்கள் அளித்துள்ளனர்.

பாட்னா,

நாடு முழுவதும் ஏழு மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். இந்த இடைத்தேர்தலில் பீகாரில் ஒரு சுவாரசிய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் பிமா பாரதி புர்னியே. இவர் ரூபாலி தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அண்மையில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ பதவியை பிமா பாரதி ராஜினாமா செய்தார். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு படு தோல்வியே கிடைத்தது.

இதற்கிடையே, ரூபாலி தொகுதி காலியானதாக அறிவிப்பட்டு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. ரூபாலி தொகுதியில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த பிமா பாரதியே மீண்டும் களமிறக்கப்பட்டார். எப்படியும் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் நம்பிக்கையில் மீண்டும் அவருகே வாய்ப்பு கொடுத்தது.

கடந்த 10 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், பிமா பாரதி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சுயேட்சை வேட்பாளரை விட பின் தங்கியுள்ளதால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் பிமா பாரதியும் அதிர்ச்சி அடைந்தனர். ரூபாலி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கலதர் பிரசாத் மண்டல் முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சுயேட்சை வேட்பாளர் ஷங்கர் சிங் உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ வாக இருந்த தொகுதியை ராஜினாமா செய்தவருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை வாக்காளர்கள் அளித்துள்ளனர்.


Next Story