ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்ட தேர்தல்: 26 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு


ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்ட தேர்தல்:  26 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 Sep 2024 9:50 PM GMT (Updated: 25 Sep 2024 9:06 AM GMT)

காஷ்மீரில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது

காஷ்மீர்,

காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் காஷ்மீர் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், மூத்த நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதைப்போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் தேசிய மற்றும் உள்ளூர் தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். மாநில முன்னாள் முதல்-மந்திரிகளான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) மற்றும் என்ஜினீயர் ரஷித் (அவாமி இத்திகாட் கட்சி) உள்ளிட்ட தலைவர்களும் காஷ்மீர் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி 24 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற இருக்கிறது.

இரண்டாம் கட்டமாக ஜம்முவின் 3 மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகள் உள்பட 26 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஹஸ்ரத்பால், கன்யார், ஹப்பக்கடல், லால் சவுக், சன்னபோரா, ஜாதிபால், ஈத்கா, சென்ட்ரல் ஷால்தெங் ஆகிய தொகுதிகள் இதில் அடங்கும். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


Next Story