ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்; 54.11 சதவீத வாக்குகள் பதிவு


ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்; 54.11 சதவீத வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 25 Sep 2024 2:56 PM GMT (Updated: 25 Sep 2024 3:20 PM GMT)

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் கத்ரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி மையத்தில் அதிக அளவாக 79.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடந்தது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடந்தது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவானது, எந்தவித வன்முறையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. 2-ம் கட்ட தேர்தலில் 6 மாவட்டங்களில் பதிவான ஒட்டுமொத்த வாக்குகள், 2024 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக பதிவாகி உள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான தலைமை தேர்தல் அதிகாரி பி.கே. போலே செய்தியாளர்களிடம் பேசும்போது, கத்ரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி பகுதியில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகி உள்ளன. இதன்படி, 79.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. சில வாக்கு மையங்களில் இன்னும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

ரியாசி மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் அதிகளவாக 74.14 சதவீதம் வாக்கு பதிவானது நடந்துள்ளது. இதற்கடுத்து, பூஞ்ச் மாவட்டத்தில் 73.78 சதவீதமும், ரஜோரி மாவட்டத்தில் 69.85 சதவீதமும், கந்தர்பால் மாவட்டத்தில் 62.63 சதவீதமும் மற்றும் புத்காம் மாவட்டத்தில் 61.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. ஸ்ரீநகரில் 29.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஸ்ரீநகரின் சில வாக்கு மையங்களில் இன்னும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story