மத்திய மந்திரி குமாரசாமியை 'காலியா' என்று அழைத்த விவகாரம்; மன்னிப்பு கோரிய கர்நாடக மந்திரி


மத்திய மந்திரி குமாரசாமியை காலியா என்று அழைத்த விவகாரம்; மன்னிப்பு கோரிய கர்நாடக மந்திரி
x

மத்திய மந்திரி குமாரசாமியை 'காலியா' என்று அழைத்த விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து கர்நாடக மந்திரி சமீர் அகமது கான் மன்னிப்பு கோரியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சன்னபட்னாவில் இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற பிரசாரத்தில், கர்நாடக வீட்டு வசதி வாரியத்துறை மந்திரி சமீர் அகமது கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஜே.டி.எஸ். கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான குமாரசாமி பற்றி பேசிய அவர், "பா.ஜ.க.வை விட 'காலியா' குமாரசாமி மிகவும் ஆபத்தானவர்" என்று குறிப்பிட்டார்.

அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய மந்திரி குமாரசாமி பற்றி நிறவெறி கருத்து தெரிவித்த சமீர் அகமது கானை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. மற்றும் ஜே.டி.எஸ். கட்சியினர் வலியுறுத்தினர். அதே சமயம், குமாரசாமி குறித்த தனது தெரிவித்த கருத்து அன்பின் வெளிப்பாடுதான் என்று சமீர் அகமது கான் கூறியுள்ளார்.

முன்பு ஜே.டி.எஸ். கட்சியில் இருந்த சமீர் அகமது கான், அப்போதைய முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்று அறியப்படுகிறார். இந்நிலையில், தற்போது அவர் கூறிய கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இது குறித்து சமீர் அகமது கான் விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், "நான் குமாரசாமியை பார்த்து இவ்வாறு அழைப்பது இது முதல் முறை அல்ல. அவர் மீதான அன்பின் காரணமாக ஆரம்பித்தில் இருந்தே இவ்வாறு நான் அழைப்பதுண்டு. அவர் எனது உயரத்தை குறிக்கும் வகையில் 'குள்ளண்ணா" என்று அழைப்பார். பதிலுக்கு நான் அவரது தோலின் நிறத்தை வைத்து 'கரியண்ணா' என்று கூறுவேன். எனது பேச்சால் ஜே.டி.எஸ். தொண்டர்களின் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.


Next Story