விண்ணில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
புதுடெல்லி,
விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது.
அவற்றிற்கு 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. தலா 220 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தி, விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களையும் இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது.
இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி கடந்த 30-ம் தேதி விண்ணில் பாய்ந்தது.
திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்தன. ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இதன்படி இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 230 மீட்டர் தூரத்தில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டு, பின்னர் 3 மீட்டராக குறைக்கப்பட்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இதனை இஸ்ரோ விஞ்ஞானிகளின் வட்டாரம் தெரிவிக்கின்றது. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வெற்றி பற்றி குழுவினர் விரிவான தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். தரவுகள் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், டாக்கிங் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. இது ஒரு வரலாற்று தருணம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
ஸ்பேடெக்ஸ் டாக்கிங் முறையில் நாம் பயணிப்போம் என தெரிவித்து உள்ள இஸ்ரோ, 15 மீட்டர் தொலைவில் இருந்து 3 மீட்டருக்கு செயற்கைக்கோள்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. துல்லிய தன்மையுடன் டாக்கிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், செயற்கைக்கோள்களை இணைக்கும் பணி வெற்றியடைந்து உள்ளது.
அவற்றை நிலைப்படுத்தும் பணியும் வெற்றி பெற்று உள்ளது. ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தியாவுக்கும் வாழ்த்துகள் என அதுபற்றிய இஸ்ரோ வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவு தெரிவிக்கின்றது.
இதேபோன்று, செயற்கைக்கோள்களை இணைத்த பின்னர், அவற்றை கட்டுப்படுத்தும் பணியும் வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கிற நாட்களில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் பணி மற்றும் மின்சார பரிமாற்ற சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.