இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன்னை கடந்தது: பிரதமர் மோடி பெருமிதம்


இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன்னை கடந்தது: பிரதமர் மோடி பெருமிதம்
x

ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

புதுடெல்லி:

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் நிலக்கரி முக்கிய எரிசக்தி ஆதாரமாக உள்ளது. மின்சாரம் தயாரிக்கவும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் எரிபொருளாகவும் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. எனவே, நிலக்கரிக்கான தேவையை கருத்தில் கொண்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தியானது ஒரு பில்லியன் டன்னை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதில், 'அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான பணிகள் மூலம், உற்பத்தியை அதிகரித்திருக்கிறோம். இந்த சாதனையானது அதிகரித்து வரும் மின் தேவைகளை சமாளிக்க உதவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். அத்துடன் ஒவ்வொரு இந்தியருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின்கீழ், இந்தியா உலகளாவிய எரிசக்தி தலைமையாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது' என்று கூறி உள்ளார்.

மத்திய மந்திரியின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது இந்தியாவிற்கு ஒரு பெருமையான தருணம், என கூறி உள்ளார்.

'1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற மகத்தான மைல்கல்லை கடந்தது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுய சார்புக்கான நமது உறுதிப்பாட்டை உணர்த்துகிறது. இந்த சாதனை, நிலக்கரி துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது' என மோடி கூறி உள்ளார்.

கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) 997.83 மில்லியன் டன் (0.99 பில்லியன் டன்) நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story