தோஷகானா ஊழல் தொடர்பான வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு
தோஷகானா ஊழல் தொடர்பான போராட்ட வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்,
கடந்த ஆகஸ்டு 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக பதவியில் இருந்த இம்ரான் கான், வெளிநாட்டு பயணங்களில் தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களில் பலவற்றை அரசின் தோஷகானா என்ற களஞ்சியத்தில் ஒப்படைக்காமல் தாமே வைத்துக்கொண்டதாகவும், சிலவற்றை விற்பனை செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக இம்ரான் கான் பொய்யான தகவல்களை அளித்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்தது. மேலும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் தொடர்பாக இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் போராட்டம் செய்யப்பட்ட வழக்கில், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இம்ரான் கானை இந்த வழக்கில் இருந்து விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதே போல் ஷா மெஹ்மூத் குரேஷி, ஷேக் ரஷீத், ஆசாத் குயேசர், ஷெர்யார் அப்ரிடி, பைசல் ஜாவித், ராஜா குர்ராம் நவாஸ், அலி நவாஸ் அவான் போன்றோரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.