2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் பலி - பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐஐஎம் (இந்திய நிர்வாக மேலாண்மை கல்லூரி) உள்ளது. இங்கு குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிலேய் கைலாஷ்பாய் (வயது 28) எம்பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி கைலாஷ்பாய்க்கு 29வது பிறந்தநாள். இதையொட்டி கல்லூரி விடுதியில் சகமாணவர்களுடன் சேர்ந்து கைலாஷ் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இதன் பின்னர், தனது அறைக்கு திரும்பியபோது 2வது மாடியில் இருந்து கைலாஷ்பாய் தவறிவிழுந்தார். இந்த சம்பவத்தில் கைலாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கைலாஷ் உயிரிழந்தது அடுத்தநாள் காலை மாணவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கைலாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.