ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி


ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
x

மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்ற அடிப்படையில் பெண் நீதிபதிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் கர்ப்பிணியான அதிதி குமார் சர்மாவும் ஒருவர். இதன்பின்பு அவருடைய கர்ப்பம் கலைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான உத்தரவு கடந்த 2023-ம் ஆண்டு ஜூனில் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. பணிநீக்கம் பற்றிய முடிவுக்காக ஐகோர்ட்டிடம் விளக்கமும் கேட்டுள்ளது. நடப்பு ஆகஸ்டில், அவர்களில் 4 நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது என கோர்ட்டு முடிவு செய்தது. ஆனால், அதற்கான பட்டியலில் அதிதி சர்மா இல்லை.

2019-20 காலகட்டத்தில், மிக சிறந்த மற்றும் சிறந்த என்ற விகிதத்தில் இருந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் சராசரி மற்றும் மோசம் என அவருடைய செயல்பாடு சரிந்தது என அறிக்கை ஒன்றில் ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 2 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில் ஒருவரான நீதிபதி பி.வி. நாகரத்னா, இதுபோன்ற நடைமுறை ஆண் நீதிபதிகளுக்கும் அமல்படுத்த வேண்டும். இதனை கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார்.

அவர் தொடர்ந்து, அந்த பெண் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். கர்ப்பம் கலைந்தும் உள்ளது. மன மற்றும் உடல் அளவில் அவர் பேரதிர்ச்சியில் இருப்பார். இந்த சூழலில் என்னது இது? என கூறிய அவர், ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்போதுதான், அது என்னவென்று அவர்களுக்கு தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

4 ஆண்டுகளாக கறைபடாத சேவையாற்றிய பதிவு உள்ள நிலையில், எந்தவித சட்ட நடைமுறையும் இன்றி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றும் நீதிபதி ஆவேசத்துடன் கூறினார்.

இந்த நடவடிக்கையை அடுத்து அதிதி சர்மா ஐகோர்ட்டிடம் அளித்துள்ள பதிலில், கர்ப்பம் கலைந்த நாட்களில் தாய்மை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான விடுமுறையில் இருந்தேன். இதனை செயல்பாட்டுக்கான கணக்கீடாக எடுத்து கொள்வது ஒரு பெரிய அநீதி என்று குறிப்பிட்டு உள்ளார். பணி நீக்கம் என்பது, சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் செயல் மற்றும் வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீறுவது ஆகும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.


Next Story