கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
புதுச்சேரி,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30- 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் புதுச்சேரியில் நேற்று இரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவு 11 மணி வரை இடைவிடாது மழை நீடித்தது. இந்த மழை காரணமாக புதுவை நகரின் பிரதான சாலைகளான அஜந்தா சந்திப்பு, அண்ணா சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, நேரு வீதி, காந்தி வீதி, புஸ்சி வீதி, காமராஜர் சாலை உள்பட நகர் முழுவதும் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளித்தது. மேலும் ரெயின்போ நகர், பூமியான்பேட்டை, சாரம், லாஸ்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த மழையால் பெரும்பாலான சாலைகளில் முழங்கால் வரை மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் கூடுதல் விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வேலைநாளாக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழை பெய்ததையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.