மும்பையில் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் - 9 பேர் படுகாயம்


மும்பையில் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் - 9 பேர் படுகாயம்
x

மும்பையில் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 22 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில், முன்பதிவு இல்லா ரெயிலாக இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க இன்று பாந்த்ரா ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

காலை 5.10 மணிக்கு பாந்த்ராவில் இருந்து ரெயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதிகாலை 3 மணியில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் ரெயில் நிலையத்தில் குவியத் தொடங்கினர். இதனிடையே ரெயில் வருவதற்கு சற்று தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிளாட்பாரத்திற்குள் ரெயில் நுழைந்தபோது அதில் ஏறுவதற்காக பயணிகள் முந்தியடித்துக் கொண்டு முன்னேறிச் சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அதோடு சிலருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்ததாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு முதுகுத் தண்டிலும், மற்றொரு நபருக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 2 நபர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story