ஆசைக்கு இணங்காத 6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்ற தலைமை ஆசிரியர் கைது
6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது. ஆனால் யார் இந்த குற்றத்தை செய்தது என்பது தெரியவரவில்லை. எனவே இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது உயிரிழந்த சிறுமி, தினமும் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் கோவிந்த் நாத் உடன் சென்று வந்ததாக சிறுமியின் தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது, அந்த சிறுமியை பள்ளியில் இறக்கிவிட்டு, வேறு வேலைக்கு சென்றுவிட்டதாக அவர் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், சம்பவத்தன்று கோவிந்த் செல்போனின் இருப்பிட விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று அவர் பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரிந்தது. இதனையடுத்து அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது சிறுமியை தான் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து கோவிந்த் நாத்தை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ராஜ்தீப் சிங் ஜாலா கூறுகையில், தலைமை ஆசிரியர் காலை 10.20 மணியளவில் சிறுமியை அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயார் அவரை காரில் ஏற்றிவிட்டுள்ளார். பள்ளிக்கு செல்லும் வழியில், கோவிந்த் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனை எதிர்த்த அந்த சிறுமி கத்த ஆரம்பித்துள்ளார். கத்துவதைத் தடுக்க சிறுமியின் கழுத்தை அவர் நெரித்ததில் அந்த சிறுமி உயிரிழந்தார்.
பள்ளிக்கு வந்ததும், அவர் சிறுமியின் உடலை காரிலேயே வைத்து வாகனத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை 5 மணியளவில், யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியின் உடலை பள்ளி கட்டிடத்தின் பின்னால் வீசிவிட்டு, அவரது பள்ளி பை மற்றும் காலணிகளை வகுப்பறைக்கு வெளியே போட்டுள்ளார்" என்றார்.